Sunday 7 May 2017

இறந்தவனின் பாதை

Dead Man's Path -  1953
மூலம்: ச்சினுவா அச்சேபே (Chinua Achebe)
மொழியாக்கம்: விளாயத்தி

மைக்கெல் ஓபியின் நம்பிக்கை அவர் எதிர்பார்த்ததை விட முன்னரே நிறைவேறி விட்டது. அவர் 1949 வருடமே என்டுமே மத்திய பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்க பட்டார். அந்த பள்ளி எப்பொழுதுமே ஒரு பின் தங்கிய பள்ளியாகதான் எல்லோராலும் கருதபட்டது. மிஷன் நிர்வாகிகள் அதை நிர்வகிக்க ஒரு துடிப்பான இளைஞர்தான் சரியானவராக இருப்பார் என்று ஓபியை தேர்வு செய்தனர். ஓபியும் மிகவும் உற்சாகத்துடன் சம்மதித்தார். அவருக்குள் தான் எத்தனை அருமையான கனவு திட்டங்கள். அவையனைத்தையும் நனவாக்க இதுதான் அருமையான சந்தர்ப்பம். உயர் தர மேல்நிலை பள்ளி கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்ததால், "அதி முக்கிய" ஆசிரியர்களில் ஒருவராக  அவரது பெயர் மிஷனரி கோப்புகளில் பதிவாகியிருந்தது. அந்த கல்வி தேர்ச்சியே, அவரை, பரிசீலனையில் இருந்த மற்ற போட்டியாளர்களைவிட தனித்தும், முன்னிருத்தியும் காட்டியது. மேலும் ஓபி வெளிபடையாகவே, பல ஆண்டுகளாக பணியிலிருந்த அனுபவமான ஆசிரியர்கள் பலரின் குறுகிய மனபான்மையையும், அவர்களது குறைந்த கல்வி தகுதியையும் தொடர்ந்து  சாடிகொண்டிருந்ததும், அவருக்கு சாதகமாக அமைந்தது.
         "இந்த பணியை சிறப்பாக எடுத்து நடத்தி விடுவோமல்லவா?" என்று பதவி உயர்வு செய்தி வந்த மகிழ்ச்சியான தருணத்தில் தனது இளம் மனைவியிடம் கேட்டார் ஓபி. அவளும் "நம்மால் முடிந்த அளவு, இறைவன் துணையுடன் முனைப்புடன் நடத்துவோம்" என்றாள். "அழகான, பூத்து குலுங்கும் தோட்டங்களை வடிவமைப்போம். நம்மை சுற்றி அனைத்தையும் நவீனமாகவும், மகிழ்ச்சி நிரம்பியதாகவும் மாற்றியமைப்போம்." மணமான இந்த இரண்டு வருடங்களில் "நவீன முறைகளின்" மேல் ஓபிக்கு இருந்த பேரார்வம் அவளையும் தொற்றிக் கொண்டது. ஓபியும், "இந்த கிழங்கள் கல்வி கற்று தருவதை விட ஓனிட்ஷா சந்தையில் வியாபரிகளாக இருப்பதே மேல்" என்று  அவளது சிந்தனையை வார்த்திருந்தார். அவளும் செய்தி வந்த நொடியிலேயே, தன்னை இளம் தலைமை ஆசிரியரின்  ஆதர்ச மனைவியாகவும் அந்த பள்ளியின் இராணியாகவும் எண்ண தொடங்கி விட்டாள்.
மற்ற ஆசிரியர்களின் மனைவிகள் இவளை சற்றே பொறமையுடன் தான் பார்பார்கள். அங்கே அனைத்திலும் ஃபேஷனை அவள்தான் தீர்மானிப்பாள்....ஆனால், ஆனால், தீடிரென்று அவளுக்கு தோன்றியது, அவளை தவிர அங்கே மனைவிகளே இருக்க மாட்டார்கள் என்று. கவலையும், நம்பிக்கையும் ஒரு சேர ஓபியிடம் இதை கேட்டபொழுது
"உடன் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் வயதில் மிகவும் சிறியவர்கள்,மணம் ஆகாதவர்கள்" என்று சொன்ன ஓபியின் உற்சாகம் ஏனோ இம்முறை இவளை தொற்றிக் கொள்ளவில்லை.
"இது மிகவும் நல்லது"
"எப்படி"
"எப்படியா? அப்பொழுதுதான் அவர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்களது நேரத்தையும், முனைப்பையும் பள்ளி வேலையில் செலுத்த முடியும்"
நான்சியின் முகம் தொங்கி விட்டது.  சில நிமிடங்களுக்கு புது பள்ளியில் அவளது வாழ்க்கை குறித்து அவளுக்கு சந்தேகம் வந்து விட்டது; ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே. அவளது அந்த சிறிய தனிபட்ட பின்னடைவு அவளது கணவனின் சிறப்பான எதிர்காலத்திற்கு தடையாக கூடாதல்லவா? நாற்காலியில் மடிந்து அமர்ந்திருந்த தன் கணவனை பாரத்தாள்.  ஒபி சற்றே கூனான தோள்களோடு சற்றே பலவீனமானவனாக தோற்றமளித்தான். ஆனால், சமயங்களில்,  தீவிரமான வேலை என்றால் திடீரென்று அபார உடலாற்றலை வெளிபடுத்தி சுற்றியுள்ளவர்களை ஆச்சரிபடுத்துவான். அவன் அமைதியாக அப்பொழுது உட்காரந்து இருந்த தோரணையில், அவனது உடல் ஆற்றல் முழுவதும் அவனது ஆழமான, இடுங்கிய கண்ணுக்குள் சென்று தேங்கி விட்டது போலவும், அதனாலேயே அவன் கண்களுக்கு ஆழமாக ஊடுருவி பார்க்கும் அசாதரண சக்தி குடி கொண்டது போலவும் இருந்தது. இருப்பத்தியாறு வயதுதான் இருந்தாலும் முப்பதுக்கு மேல் என தோற்றமளித்தான். கூட்டி ,கழிக்கையில் அழகற்றவன் என்று சொல்லிவிட முடியாது.
"என்ன யோசனை மைக்?"
"எப்பேர்பட்ட வாய்ப்பு நமக்கு. காத்திருந்து கடைசியில் ஒரு பள்ளி கூடத்தை சிறப்பாக எப்படியெல்லாம் நடத்தலாம் என்று இவர்களுக்கு காட்ட எப்பேர்பட்ட வாய்ப்பு"

என்டுமே பள்ளி இவர்கள் கேள்வி பட்டதை விட மோசமாக இருந்தது. மிஸ்டர். ஓபி அவர்கள்  பள்ளியை மேம்படுத்துவதை பெரும் இலட்சியமாக, மொத்த நேரத்தையும் அதிலேயே செலவிட்டார். திருமதி. ஓபி அவர்களும்தான். ஓபி அவர்களுக்கு இரண்டு் குறிகோள்கள். மிகவும் உயர் தரமான பாட போதிப்பு என்பதில் கண்டிபாக இருந்தார். இரண்டாவது, பள்ளி இருந்த வளாகத்தை  பார்வைக்கு இனிய இடமாக்குவது. மழை காலம் தொடங்க, நான்சியின் கனவு தோட்டம் உயிர் பெற்று, பூத்து குலுங்க ஆரம்பித்தது. செம்பருத்திகளும், "ஆலாமண்டா" பூக்களிலுமான அழகிய வேலி,  மிகவும் கவனத்துடன் பராமரிக்கபட்ட வளாகத்தை சுற்றி வளர்ந்தது. அந்த அழகிய வேலி, ஊரில் இருந்த மற்ற நிலங்களின் ஒழுங்கற்ற தன்மையுடன் ஒப்பு நோக்குகையில் வளாகத்தை ஒரு தனி பொளிவுடன் காட்டியது.
ஒரு ரம்மியமான மாலை, ஒபி அவரது பள்ளி வளாகத்தில் நின்றபடி தனது உழைப்பின் பலனை இரசித்துக் கொண்டிருந்த பொழுது, சுழலளுக்கு சற்றும் தொடர்பில்லாமல், ஒரு கிழவி, வேலியை தாண்டி,  சாமந்தி பத்திகளின் நடுவே நடந்து, பள்ளியின் மறு பக்கம் உள்ள வேலியை கடந்து சென்றாள். ஓபிக்கோ அதிர்ச்சி. வேலி அருகே சென்று பார்த்தால், பார்வைக்கு ஏறகுறைய மறைந்து விட்ட ஒரு சிறு பாதை. கிட்ட தட்ட கைவிடபட்ட நிலையில். வேலியின் நடுவே, இப்பக்கமும், வளாகத்தின் அப்பக்கமும் சிறு இடைவெளி, இந்த பாதைக்காகவே.
"எனக்கு நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது" ஒபியின் கோபத்திற்கு அகப்பட்டார் அங்கே மூன்றாடுகளாக வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் "எப்படி நீங்கள் வேலியில் இப்படி ஒரு இடைவெளியை விட்டு் வைத்தீர்கள்?"
"அந்த பாதை" மன்னிப்பு கோரும் பணிவுடன் தயங்கினார் அந்த ஆசிரியர் "அவர்களுக்கு முக்கியமானதாக படுகிறது. எவரும் அதை உபயோகித்து பார்த்ததில்லை. இருந்தாலும் அவர்களது கிராமத்து கோவிலையும், அவர்களது ஈடுகாட்டையும் அது இணைக்கிறது"
"இருக்கட்டுமே, பள்ளிக்கும் இதற்கும் என்ன தொடர்பு". "தெரியவில்லை" என்று தோளை குலுக்கினார் அந்த ஆசிரியர்."ஆனால் சில வருடங்களுக்கு முன் இதை மூட முற்பட்ட பொழுது அது பெரிய சச்சரவில் முடிந்தது"
"அது அப்பொழுது. ஆனால் இன்றில் இருந்து இதை மூடியாக வேண்டும். அடுத்த வாரம் ஆய்வுக்கு வரும் கல்வி அதிகாரி என்ன நினைப்பார்? அவர் இங்கே இருக்கும் நேரம், இந்த கிராமத்தான்கள், ஏதாவது பேகன் சடங்கு என்று இந்த பாதையை பயன் படுத்தினால்? நான் என் முகத்தை எங்கே வைத்துக் கொள்ளுவது"
மறுநாள் காலை தடியான குச்சிகள் நெருக்கமாக நடபட்டு, குச்சிகளின் இடையே வேலி கம்பிகள் கட்ட பட்டு அந்த பாதை, வளாகத்தினுள் நுழையும் இடத்திலும், வெளியே செல்லும் இடத்திலும் மூடபட்டது.
மூன்று நாட்கள் கழித்து, "அனி" கோயிலின் பூசாரி, ஓபியாரை பார்க்க வந்தார். பூசாரி வயதானவர், சற்றே கூனுடன் நடந்து வந்தார்.தடிமனான கைதடி ஒன்றை வைத்திருந்தார். பேச்சுகிடையில் தன் தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்க அந்த தடியை ஒங்கி தட்டும் வழக்கம் உள்ளவர். வழக்கமான முகமன்கள் ஆன பிறகு "எங்கள் பாட்டன் பூட்டன் பாதையை மூடிடீங்களே" என்றார்
"ஆம்" பதிலளித்தார் மிஸ்டர். ஓபி. "எங்கள் பள்ளி வளாகத்தை நெடுஞ்சாலையாக பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க முடியாது"
"ஐயா, சின்ன தம்பி, நான் சொல்றத கொஞ்சம் கேளு, சாமி" என்ற பூசாரி தடியை பலமாக ஒரு முறை தட்டினார். "இந்த வழி நீ பொறக்குறதுக்கு முன்னாடியும் இருந்துச்சு. ஒன் அப்பன் பொறக்குறதுக்கு முன்னாடியும் இருந்துச்சு. இந்த கிராமத்தோட மொத்த வாழ்க்கையும் இந்த பாதையை நம்பிதேன் இருக்கு. செத்து போற எங்க உறவுகாரங்க, இந்த பாதை வழியாதான் மேலோகம் போறாய்ங்க. எங்க வீட்டுக்கு விருந்தாளியா வர்ற எங்க மூதாதயும் இந்த பாதை வழியாதான் வர்றாய்ங்க. இது எல்லாத்தையும் விட, முக்கியமா, இந்த பாதை வழியாதான் எங்க வீட்டில் பொறக்குகிற ஒவ்வொறு குழந்தையும் வருது" என்று முடித்தார் பூசாரி தாத்தா.
பூசாரி முடிக்கும் வரை அவர் சொல்வதை எல்லாம் விஷமம் கலந்த புன்னகையுடன் கேட்டார் மிஸ்டர்.ஓபி
"எங்கள் பள்ளயின் நோக்கமே இந்த மூட நம்பிக்கைகளை களைவதுதான். இறந்தவர்களுக்கு நடைபாதை தேவையில்லை. அப்படியோரு கற்பனையே எவ்வளவு அபத்தமானது. இந்த மாதிரி எண்ணங்களை பார்த்து சிரிக்க  மாணவர்களுக்கு கற்பிப்பதே எங்கள் கடமை"
"நீ சொல்றது சரிதேன் தம்பி. ஆனா நாங்க வெறுமனே எங்க பாட்டன், பூட்டன், எங்களுக்கு சொல்லி கொடுத்தத காலம் காலமா செஞ்சிட்டு இருக்கோம். இந்த அடப்பை திறந்து வீட்டீகனா நல்லா இருக்கும் தம்பி. நான் எப்பவும் பஞ்சாயத்துனு வந்துட்டா பொதுவுல சொல்றது ஒன்னுதான்: பருந்தும் இருந்துட்டு போட்டும், கழுகும் இருந்துட்டு போட்டும்". என்று கைதடியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார் பூசாரி்
"மன்னிக்க வேண்டும் எங்கள் வளாகத்தை ஒரு பொது வழியாக உபயோகிக்க நாங்கள் அனுமதிக்க முடியாது. அதற்கு எங்கள் நிர்வாக ஒழுங்குமுறையில் அனுமதியில்லை. நீங்கள் வேண்டுமானால், வளாகத்தை சுற்றி ஒரு புது பாதை அமைத்து கொள்ளுங்கள். நான் எங்கள் பள்ளிக் கூட மாணவர்களை அந்த பணிக்கு உதவியாக அனுப்பி வைக்கிறேன். உங்கள் மூதாதைகள் சிறிதளவு நீளமான புதிய வழியை ஒரு பெரிய சுமையாக கருதமாட்டர்கள்" என்றார் மிஸ்டர். ஓபி.
"எனக்கு சொல்றதுக்கு வேற எதுவும் இல்லை" என்று ஏற்கனவே வெளியே சென்று விட்ட பூசாரி தாத்தா அங்கிருந்த படியே குரல் கொடுத்து விட்டு புறபட்டுவிட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து கிராமத்தில் ஒரு இளம் பெண், பிரசவத்தில் இறந்து விட்டாள். ஆலோசனைக்கு அழைக்கபட்ட சாமியாடி, பாட்டனையும் பூட்டனையும் வேலி அவமதித்து விட்டது, அவர்களை சாந்தி செய்ய தகுந்த பலி தேவை என்று அருள் வாக்கு அளித்து, மலையேறினான்.
மறுநாள், ஒபி தன் உழைப்பின் இடிபாடுகளின் இடையே கண் விழித்தான். அழகான வேலி, அந்த பாதை அருகே மட்டுமல்ல வளாகத்தை சுற்றி, பிரித்து வீச பட்டிருந்தது. தோட்ட பாத்திகள் சிதைக்க பட்டிருந்தன. பள்ளியின் ஒரு கட்டிடம் முழுதுமாக அடித்து, நொறுக்கி, தரைமட்டமாகியிருந்தது.... அதே நாள், வெள்ளைகார மேலதிகாரி பள்ளியை ஆய்வு செய்ய வந்தார். என்டுமே பள்ளியை பற்றி மட்டமான ஆய்வறிக்கை எழுதி,  இறுதியில் "பள்ளிக்கும், கிராமத்திற்கும் இனக் குழு போராட்டம் வெடிக்கும் அபாயமான சூழ்நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஆர்வ கோளாறினால் முறை தவறி நடந்த புது தலைமையாசிரியர்" என்று முடித்திருந்தார்.

2 comments:

  1. Excellent Translation. Thanks for introducing us the works of Chinua Achebe.

    ReplyDelete